×

தடுப்பூசி தட்டுப்பாடா?

கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அடிப்படையில் உலக அளவில் முதலிடத்தையும், பலி எண்ணிக்கை அளவில் இரண்டாம் இடத்தையும் இந்தியா பிடித்திருப்பது மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தி, உயிரிழப்பை தடுக்கும் ஒரே நிவாரணம் தடுப்பூசி மட்டுமே. தற்போதைய நிலவரப்படி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசி 80 சதவீதம், கோவிஷீல்டு 70 சதவீதம் பாதுகாப்புத்திறன் கொண்டதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருபுறம் மகாராஷ்டிரா உள்ளிட்ட கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில், பல லட்சம் தடுப்பூசி டோஸ்களை அம்மாநில அரசுகள் வீணடித்து விட்டன. தமிழகத்திலும் 11 சதவீத மருந்துகள் வீணடிக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நிலவி வருகிறது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, முதல் டோஸ் போட்ட 28 நாட்களில் 2வது டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். ஆனால், தட்டுப்பாடு காரணமாக தற்போது 42 நாட்களில் வரும்படி மருத்துவமனை நிர்வாகங்கள் பொதுமக்களை அலைக்கழிக்கின்றன. அதே நேரம் சில தனியார் மருத்துவமனைகளில் 28 நாட்களில் 2வது டோஸ் போடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்படுகிறதா அல்லது தனியார் மற்றும் வெளிநாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ் மருந்துகளை விற்பனை செய்ததால், அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறதா என்பதை சுகாதாரத்துறை தான் விளக்க வேண்டும். கோயில் திருவிழாக்களுக்கு தடை போட்டுள்ள நிலையில், ‘தடுப்பூசி திருவிழா’ தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. இன்றுடன் முடிவடைய உள்ள இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் மக்கள் அதிகளவு கூடுகின்றனர். இது தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. அதே நேரம் இந்த முகாமில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இன்றோடு நிறுத்தி விடாமல் இந்த சிறப்பு முகாம்களை ஒவ்வொரு வார்டுகள், நகரின் முக்கிய இடங்களில் நடத்த வேண்டும். மருந்துகளை வீணடிக்காமல் 10 பேர் சேர்ந்ததும், தடுப்பூசி போட வேண்டும். ஒருவருக்கு போட்ட பின், அடுத்த நபர் 4 மணி நேரத்திற்குள் வரவில்லையென்றால் மற்ற 9 டோஸ்கள் வீணாகி விடும். எனவே, மருந்துகளை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும்.தற்போது ரஷ்ய தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக் V) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது 91.5 சதவீத பாதுகாப்புத்திறன் கொண்டது என கூறப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால், கொரோனா நம்மை நெருங்காது என பலர் எண்ணுகின்றனர். இது தடுப்புச்சாதனம் மட்டுமே. உயிரிழப்பை, தீவிர பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுக்கிறது என்று மட்டுமே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மேலும் சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்வோம். அப்போதுதான் இந்த கொடிய வைரஸிடமிருந்து நாம் விரைவில் மீள முடியும்….

The post தடுப்பூசி தட்டுப்பாடா? appeared first on Dinakaran.

Tags : second wave of Corona ,India ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...