தஞ்சாவூர், ஜூன் 5: தஞ்சை-நாகை சாலையில் குப்பைகள் தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்கிறது. தஞ்சை-நாகை செல்லும் சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. ஒருசில பகுதிகளில் இறைச்சி கழிவுகளையும் சிலர் கொட்டுகின்றனர்.
இதன் காரணமாக ராஜீவ் நகர், ஞானம் நகர் சோழன் நகர் போன்ற இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சிலர் குவிந்து கிடக்கும் குப்பைகளில் தீ வைத்து விடுகின்றனர். குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்படுவதால் சாலை முழுவதையும் புகை சூழ்ந்து கொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
மேலும், குப்பைகள் கொளுத்தப்படுவதால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் வயதானவர்கள், குழந்தைகளுககு சுவாச நோய்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சை-நாகை சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.