தஞ்சாவூர், ஏப்.30: தஞ்சாவூர் மாவட்ட சத்யா விளையாட்டரங்கில் நேற்று கோடைக் கால பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த பயிற்சி நேற்று முதல் மே 13ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது. அதனை மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கற்பகம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவால், 2024ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான 15 நாட்கள் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு தஞ்சாவூர், அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
விளையாட்டு பயிற்சி முகாமில் கூடைப்பந்து, வாலிபால், வளைகோல்பந்து, வாள்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர்கள் ரூ.170+ 18% ஜிஎஸ்டி, கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம். கட்டணத் தொகையினை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் POS Machine, G-Pay, Phone-Pay, Credit Card, Debit Card, UPI மூலம் செலுத்தலாம்.பயிற்சி முகாம் காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில, தேசிய, மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, மேற்படி பயன்களை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டத்தினை சார்ந்த 18 வயதிற்குட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர் அதிக அளவில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அலுவலக தொலைபேசி எண்.04362-235633 என்ற எண்ணிலும், 7401703496 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், பயிற்சியாளர்கள் பாபு, குணசீலன், ரஞ்சித், நிர்மல், முத்துக்குமார், நாமக்கல் வினோதினி, தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூர் மாவட்ட சத்யா விளையாட்டரங்கில் கோடை கால பயிற்சி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.