டாக்கா : பிரதமர் மோடியின் பயணத்தால் வங்கதேசம் பற்றி எரிகிறது. அங்கு தொடரும் வன்முறைகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 15 மாதங்களுக்கு பிறகு முதல் வெளிநாடாக வங்கதேசம் சென்ற பிரதமர் மோடியை எதிர்த்து அங்குள்ள இஸ்லாமிய அமைப்பினர் தொடங்கிய போராட்டம், மோடி டெல்லி திரும்பிய பிறகும் நீடித்து வருகிறது. கிழக்கு வங்கதேசத்தில் இந்துக் கோயில்கள் மீதும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோக, பல்வேறு அரசு அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. ஊடக சங்கங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
கிழக்கு வங்கதேசத்தில் உள்ள பிராமன்பாரியா மாவட்டத்தில் ரயில் மீது ஹெபிசத் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ரயிலின் இஞ்சின் மற்றும் ஏறக்குறைய அனைத்து பெட்டிகளையும் நாசம் செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று ஹெபிசத் இ இஸ்லாம் என்ற அமைப்பு அழைப்பு விடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. தலைநகர் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்கார்கள் வாகனங்களையும் டயர்களையும் கொளுத்தினர்.
அவர்களை நோக்கி ராணுவத்தினரும் காவல்துறையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். வங்கதேசத்தில் கடந்த 3 நாட்களாக நீடிக்கும் வன்முறையில் ராணுவமும் காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலைமை இன்னும் கட்டுக்குள் வராமல் வங்கதேசம் முழுவதும் வன்முறை பரவி உள்ளதால் ராணுவமும் காவல் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.