இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறகு பல்வேறு தளர்வுகளுடன் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு  இன்று  கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டு கல்வி தொடர அனுமதிக்கப்பட்டனர். நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் 8 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., எம்.எஸ்சி. ஆகிய முதுகலைப் படிப்புகளில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதை தொடர்ந்து டிசம்பர் 7ம் தேதி (இன்று) முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைளையும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். கல்லூரி வளாகம், வகுப்பறை என அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். உள் நுழையும் இடங்களில் வெப்பநிலை கணக்கிடும் கருவி, சானிடைசர், முக கவசம் அணிய வேண்டும். அருகில் உள்ள சுகாதார மையங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்விநிறுவனங்கள் விழிப்புணர்வு உள்ளிட்ட பாதுகாப்பு, சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களுக்கு கொரோனா இருந்தால் கண்டிப்பாக மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது.மாணவர்களை பகுதி பகுதியாக பிரித்து சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்கலாம். ஒரு நபர் இடைவெளி விட்டு வகுப்பறையில் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்களின் உடல்நிலை சீரான இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். கல்லூரியில் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது எனில் உடனே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். நேரடி வகுப்பு அல்லாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடங்களைக் கற்க விரும்பினால் அவர்களுக்குத் தேவையான ஸ்டடி மெட்டிரியலை கொடுக்க வேண்டும்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகக் கல்லூரிகளுக்கு வர முடியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி. மாணவர்கள் முடிந்தவரைக் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாரத்துக்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் கல்லூரிக்கு சென்றனர்.

Related Stories: