தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: மாதவரம் வி.மூர்த்தி பிரசாரம்

திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி போட்டியிடுகின்றார். இவர், நேற்று சோழவரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமனூர், பெருங்காவூர், அலமாதி போன்ற 12 பஞ்சாயத்துகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவருக்கு பல இடங்களில் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வெற்றி பெற வாழ்த்தினர். அப்போது, அதிமுக ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும், தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் பொதுமக்களிடையே விளக்கி வாக்கு சேகரித்தார்.

மக்களிடையே மாதவரம் மூர்த்தி பேசுகையில், ‘மாதவரம் தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னை நன்றாக தெரியும். மாதவரம் தொகுதியில் மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவற்றை தொகுதி மக்களுக்கு பெற்றுத்தர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின் போது அதிமுக, பாமக, பிஜேபி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

Related Stories: