டிரான்ஸ்போர்ட் உரிமையாளரை தாக்கி காரை சேதப்படுத்தி மிரட்டல்

புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரி உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (30). இவர் 13 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்துள்ளார். கடந்த ஜூலை 19ம் தேதி இவர் தனது நண்பரான பிரசாந்த் என்பவரின் காரை சொந்த உபயோகத்திற்காக அதிகாலை 4.15 மணியளவில் ஓட்டிச் சென்றபோது வில்லியனூர் மெயின்ரோட்டில் பிரபல வீட்டு உபயோக வணிக நிறுவனம் முன் அடையாளம் தெரியாத 2 பேர் காரை நிறுத்தி பிரபுவை கீழே இறங்குமாறு கூறினார்களாம். அதற்கு இறங்க மறுத்த பிரபு தொடர்ந்து காரை இயக்க முயன்ற நிலையில், இருவரும் அவரது கையை பிடித்து இழுக்கவே, கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த இடத்தில் மோதி காரின் பின்புற பகுதி சேதமடைந்தது. பின்னர் பிரபு அவர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த 2 பேரும் கார் சாவியை பிடுங்கி பிரபுவை கன்னத்தில் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு காரை அங்கிருந்து ஓட்டிச் சென்று விட்டார்களாம்.

இதுபற்றி உடனே தனது நண்பரான பிரசாந்துக்கு பிரபு தகவல் கொடுக்கவே, கார் மாதாந்திர தவணையில் இருக்கும் தகவலை கூறவே, சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்துக்கு அவர் சென்று கேட்டபோது சரியான பதிலை அளிக்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து அங்கு விபரத்தை கேட்டபோது பிரபுவை தாக்கியது, அங்கு பணிபுரியும் ஊழியரான ராஜா மற்றும் ஒரு ஊழியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக பிரபு நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், 4 பிரிவுகளின்கீழ் ராஜா உள்பட 2 பேர் மீதும் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டிரான்ஸ்போர்ட் உரிமையாளரை தாக்கி காரை சேதப்படுத்தி மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: