கொல்கத்தா, :என் அனுமதியின்றி புகைப்படத்தை எதற்காக பயன்படுத்தினீர்? எனக்கூறி ஆப்ஸ் நிறுவனம் மீது பெண் எம்பியும், நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல இந்தி நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் என்பவர், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘இணையதள செயலி குறித்த விளம்பரத்தில், எனது உருவப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட செயலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை தனது டுவிட்டர் பதிவில், ‘எனது அனுமதி இல்லாமல் உருவப்படத்தை பயன்படுத்தியது ஒருபோதும் ஏற்க முடியாதது. கொல்கத்தா போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். நடிகையின் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன், எம்பி நுஸ்ரத் ஜஹான் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் அனுஜ் சர்மாவுக்கு, டுவிட் பதிவு ஒன்றை டேக் செய்தார். அதில், விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்தார்.
அப்போது அவர் வெளியிட்ட பதவில், ‘இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது அனுமதியின்றி படங்களைப் பயன்படுத்தி உள்ளனர். கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார். எம்பி நுஸ்ரத் ஜஹான், பெங்காலி திரையுலகின் முக்கியமான பிரபல நடிகையாவார். அவர் கடைசியாக ‘அசூர்’ என்ற படத்தில் நடித்தார். அவர் நடித்த ‘எஸ்.ஓ.எஸ் கொல்கத்தா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.