ஜாமீனில் வெளியே வந்து 9 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது

கடலூர், நவ. 9: கடலூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து 9 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அருள் அரசு(49). இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அந்த ஓட்டலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடலூர் தேவனாம்பட்டினம் போட் மேன் தெருவை சேர்ந்த கணேஷ் (38) என்பவர் மீது கடலூர் புதுநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கணேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி கணேஷ் பலமுறை அருள்அரசுவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் கடந்த 11.4.2014ல் மீண்டும் கணேஷ் சென்று அருள் அரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அருள் அரசு தனது காரில் ஏறி அமர்ந்த போது கணேஷ் கத்தியால் அருள் அரசுவின் மார்பிலும் வயிற்றிலும் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் கணேசை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் கடந்த 9.2.2015ல் கணேசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இது குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரணை செய்தபோது, அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் கடலூர் எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டுகள் கருணாகரன், சிவமணி, சுப்புலிங்கம், சதீஷ், ஜெஸ்டின் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கணேஷ் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் ஆந்திராவுக்கு சென்று கணேசை நேற்று கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்தவரை பிடித்து கைது செய்த தனிப்படையினரை எஸ்பி ராஜாராம் பாராட்டினார்.

தலைமறைவாக இருந்த கணேசை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது உறவினர்களிடம் விசாரணை செய்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கணேஷ் புவனகிரியில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரது மைத்துனர், அவரது சகோதரர் ஆகியோரின் செல்போன் எண்களை தொடர்ந்து புலனாய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஆந்திர மாநிலம் நகரியில் தலைமறைவாக இருந்த கணேசை போலீசார் கைது செய்தனர்.

The post ஜாமீனில் வெளியே வந்து 9 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: