சேலம், நவ. 15: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று, பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல திறக்கப்பட்டன.
ஆனால், விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். இதனால் பலரும் குடைபிடித்தபடி டூவீலரில் சென்றனர். இதேபோல் அலுவலகம், தொழில் நிறுவனங்கள் உள்பட பணிக்கு செல்பவர்களும் நேற்று காலை பெய்த மழையால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் 33.90 மிமீ மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகள் மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post சேலத்தில் தொடர் சாரல் மழை appeared first on Dinakaran.