×

செம்பனார்கோயில் அருகே காமாட்சி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

 

செம்பனார்கோயில், ஆக.18: செம்பனார்கோயில் அருகே உள்ள சங்கிகருப்பு கிராமத்தில் உள்ள மாரியம்மன்கோயில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே சங்கிருப்பு கிராமத்தில் குமளமேட்டு காமாட்சி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இக்கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்றுமுன்தினம் தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தயிர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காத்தவராயன் திருக்கல்யாணம் நடைபெற்றது.விழாவையொட்டி காப்பு அணிவித்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், சாவடி காவிரி ஆற்றங்கரையில் இருந்து கரகம், அலகு காவடி ஆகியவற்றை மேள,தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலை வந்தடைந்ததும் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் வாசு.பக்கிரிசாமி, வாசு.அன்பழகன் ஆகியோர் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post செம்பனார்கோயில் அருகே காமாட்சி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kamatshi Mariamman ,temple ,Dimithi festival ,Sembanarkoil ,Mariamman temple ,Sangikaruppu village ,Kumalamettu Kamakshi Mariamman temple ,Sankirupu village ,Sembanarkoil, Mayiladuthurai district ,Kamatshi Mariyamman Temple Dimithi Festival ,Sembanar Temple ,
× RELATED மோகனூர் அருகே கோயிலில் தீமிதி விழா கோலாகலம்