தாம்பரம், நவ.15: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மதியம் முதல் ஏராளமானோர் சென்னை திரும்ப தொடங்கினர். குறிப்பாக, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான கார்களில் பொதுமக்கள் சென்னைக்கு வந்தனர். அதேபோல, சிறப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளிலும் பொதுமக்கள் சென்னை திரும்பினர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகளவில் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் ஏராளமான சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சென்னை நோக்கி வந்தது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலை, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாம்பரம் பகுதியில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. அதிகளவில் பேருந்துகள், கார்கள் மூலம் பொதுமக்கள் சென்னை நோக்கி வந்தாலும் நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்ற நிலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்லும் நேரம் தொடங்கிய போது வண்டலூரில் இருந்து இரும்புலியூர் வரை போக்குவரத்து நெரிசல் தொடங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலை வழியாகவும், வண்டலூரை கடந்து வந்த வாகனங்கள் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாகவும் திருப்பிவிடப்பட்டதால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் இறங்கி அங்கிருந்து மாநகரப் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்ஸிகளில் சென்றதாலும், காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததாலும் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு, உடனுக்குடன் போக்குவரத்தை சீர் செய்தனர்.
The post சென்னை திரும்பும் மக்களால் நெரிசலை தவிர்க்க வண்டலூரில் போக்குவரத்து மாற்றம்: வாகனங்களை ஒழுங்குபடுத்த 250 போலீசார் appeared first on Dinakaran.