பாடாலூர், பிப்.15: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.72 லட்சம் மதிப்பில் புதிய 4 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் நபார்டு 2024-2025 நிதி திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சம் மதிப்பில் புதிய 4 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லபன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடம் தரைத்தளத்தில் 2 வகுப்பறை, முதல்தளத்தில் 2 வகுப்பறை என அமைய உள்ளது. வருகிற கல்வியாண்டில் பள்ளிக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் என எம்எல்ஏ பிரபாகரன் கூறினார்.
The post செட்டிகுளம் அரசு பள்ளியில் ரூ.72 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடம் கட்டும் பணி appeared first on Dinakaran.