ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றச்சாட்டு... காதல் திருமணம் செய்த தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் : பஞ்சாயத்தார் 2 பேர் கைது

வாணியம்பாடி, :திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கீழ்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். சின்னகொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பவானி. இருவரும் காதலித்துள்ளனர். இதையறிந்த பவானியின் தந்தை நாகராஜ், அதே கிராமத்தை சேர்ந்த வேறொருவருக்கு அவசர அவசரமாக பவானியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் திருமணம் இன்று காலை நடக்க இருந்தது.

இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள ஒரு கோயிலில் காதல்ஜோடி நேற்று முன்தினம் திடீரென திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் மனைவியுடன் ஜீவானந்தம் நேற்று கீழ்பள்ளிப்பட்டிற்கு வந்தார். இதையறிந்த ஊர் பஞ்சாயத்தார் ஜீவானந்தத்திடம் திருமணம் நின்று போனதால், அதற்கு நஷ்டஈடாக ₹40 ஆயிரம் தரவேண்டும் என்றனர்.

கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர்கள் யாராவது காதல் திருமணம் செய்தால் பெண் வீட்டார் ₹5 ஆயிரம் அபராதமும், மாப்பிள்ளை வீட்டார் ₹8 ஆயிரம் அபராதமும் ஊர்பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டியது வழக்கமாம். ஆனால் தற்போது காதல் திருமணம் செய்த பெண் வீட்டார் ₹10 ஆயிரமும், மாப்பிள்ளை வீட்டார் ₹40 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும் என்று பஞ்சாயத்தார் கூறினார்களாம். இதையடுத்து ஜீவானந்தம் ₹20 ஆயிரமும், பெண் வீட்டார் ₹10 ஆயிரமும் அபராதம் செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் ஜீவானந்தம் நேற்று திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்தாரான கமலக்கண்ணன், செல்வராஜை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சண்முகத்தை தேடி வருகின்றனர். பஞ்சாயத்தில் செலுத்திய ₹30 ஆயிரத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: