சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு கால்வாய்களில் இருபுறமும் காடுகள் வளர்க்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாடானை, ஏப்.16: பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள வரத்து கால்வாய்களில் இருபுறமும் சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு சமூக காடுகள் வளர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிகளவு கண்மாய் மற்றும் குளங்கள் திருவாடானை தாலுகாவில் உள்ளன. இப்பகுதியில் உள்ள கன்மாய்கள் சங்கிலித் தொடர் போல் அடுத்தடுத்து இணைப்பாக உள்ளது. இந்த கண்மாய்களுக்கு இடையே வரத்து கால்வாய்கள் உள்ளன. மழை காலங்களில் பெய்யும் மழை தண்ணீர் ஒவ்வொரு கண்மாயாக நிரம்பி மீதமுள்ள உபரி தண்ணீர் அடுத்தடுத்து உள்ள கண்மாய்கள் சென்று நிரம்பி கடைசியாக கடலில் போய் கலக்கும். ஒரு கண்மாயில் இருந்து மற்றொரு கண்மாய்க்கு இடையே நீண்ட தொலைவிலும் பல மீட்டர் அகலத்திலும் வரத்து கால்வாய்கள் உள்ளன. இந்த வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் ஆக்கிரமிப்புகளிலும் சிக்கி உள்ளது. மீதமுள்ள இடங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்து கிடக்கின்றன. இதனால் மழை காலங்களில் அதிகளவு மழை பெய்தாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று விடுகிறது.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் கண்மாய்கள் பெருகுவதிலும் தடை ஏற்படுகிறது. எனவே இந்த வரத்து கால்வாய்களை நில அளவை செய்து சீமை கருவேல மரங்களை அகற்றி வரத்து கால்வாயின் இரு புறங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஓரளவு கண்மாய் குளங்கள் தூர்வாரும் பணி அரசால் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரத்து கால்வாய்கள் இதுவரை அரசால் முழுமையாக மராமத்து செய்யப்பட வில்லை. பல கிராமங்களில் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர் இதனால் மழை காலங்களில் தண்ணீர் சரியாக இந்த கால்வாய்களில் வெளியேறுவதில்லை.மேலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வரத்து கால்வாயை ஆக்கிரமித்துள்ளது. மழை பெய்யும் போது இந்த சீமை கருவேல முட்செடிகளால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடப்பதால், அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே அரசு வரத்து கால்வாய்களை கணக்கெடுத்து நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் சீமை கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் அதைத்தொடர்ந்து வரத்து கால்வாய் இரு புறங்களிலும் மரங்களை நட்டு சமூக காடுகள் உருவாக்கி பராமரிக்க வேண்டும். இப்படி செய்வதனால் கால்வாயின் அகலம் குறையாமல் எல்லை கற்களை போல் ஒரு அடையாளமாக வரத்துக் கால்வாய்கள் இருக்கும். மேலும் அந்த மரங்களை தாண்டி ஆக்கிரமிப்பது தடுக்கப்படும் வரத்துக் கால்வாய் பாதுகாப்பது போலவும் இருக்கும். சமூக காடுகளால் நல்ல மழை பொழிவும் ஏற்படும். பூமியின் வெப்பமும் மாசும் ஏற்படுவதை தடுக்கும் என்றனர்.

The post சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு கால்வாய்களில் இருபுறமும் காடுகள் வளர்க்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: