சிவகங்கை, பிப். 24: Mசிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டங்களுக்க தேவையான நிதி நிலைகள் குறித்து அரசிடம் தெரிவித்து மக்களின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து முதல்நிலை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் மற்றும் செலவினங்கள் குறித்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தேவையான நிதி நிலைகள் விவரங்களை எடுத்துரைத்து, அறிக்கையாக சமர்ப்பிக்கலாம்.
சாலை வசதி, மின்சாரம், தெருவிளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்,
ஆகியன குறித்தும், தேவையான நிதிநிலைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் டிஆர்ஓ மோகனசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை ஆர்டிஓ பால்துரை மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை: கண்காணிப்பு அலுவலர் பேச்சு appeared first on Dinakaran.