திரும்பிய இடமெல்லாம் ‘திரு’ வாக்காளர்களே...!: முதுகுளத்தூரில் ‘மரியாதை’ கிராமம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில்  உள்ளது ஆ.புனவாசல் கிராமம். இந்த பஞ்சாயத்தில் உள்ள 4 வார்டுகளில் மொத்தம் 961 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் திருக்கண்ணன் என்ற பெயரில் 37 பேர், 35 திருக்கம்மாள், 23 திருமுருகன், 7 திருப்பாண்டி,  4 திருப்பாண்டியம்மாள், 4 திருச்செல்வி, திருமலை, திருமலைபாண்டி, திருமூர்த்தி தலா 3 என ‘திரு’ மற்றும் ‘தி’ என்ற முதல் எழுத்தில் தொடங்கும் பெயரில் 300க்கும் மேற்பட்ட  வாக்காளர்கள் உள்ளனர். இதனால் புனவாசல் வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெரும் குழப்பம் அடைகின்றனராம்.

இப்பகுதி கிராம மக்களின் குல தெய்வம் கோயிலாங்குளம் திருக்காலுஉடைய அய்யனார். இதனால் பிறக்கும் குழந்தைக்கு ‘திரு’ அல்லது ‘தி’ என தொடங்கும் முதல் எழுத்தில் பெயர் வைத்து வருகின்றனர். கிராமத்தில் பெயரை சொல்லி அழைப்பதிலும், சுபகாரிய பத்திரிகைகள், மொய் எழுதுவதிலும் குழப்பம் வந்து விடக்கூடாது என புனைப்பெயரை வைத்து அழைக்கின்றனர். பத்திரம் போன்ற ஆவணங்கள் பயன்பாட்டிற்கும் தந்தை பெயருடன், தாத்தா, அவரின் அப்பா என 3 பெயரை பெயரில் விலாசத்தை போட்டு பதிவு செய்கின்றனர். இதனைப்போன்று முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகாஞ்சிரங்குளம் கிராமத்தில் 226 ஆண் வாக்காளர்களில் 30க்கும் மேற்பட்டோர் சப்பாணி பெயரில் உள்ளனர். இங்கு குலதெய்வம் சப்பாணி பெயரில் இருப்பதால், இப்பெயரை வைத்துள்ளனர்.

Related Stories: