சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆடி பவுர்ணமியில் அலைமோதிய கூட்டம்

 

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தொடர்ச்சியாக 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் இங்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடி பவுர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதல் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முத்தங்கி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக உற்சவர் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராய் காட்சியளித்தார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம், குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் செய்திருந்தார். பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்,

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆடி பவுர்ணமியில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: