ஈரோடு, ஜூலை 10: ஈரோட்டில் சினிமா டைரக்டர் வீட்டில் நகை திருடிய வழக்கில் பைனான்ஸ் நிறுவன ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நாடார் மேடு கெட்டி நகரை சேர்ந்தவர் ராகவ ஹரிகேசவா என்ற மோகன் குமார்(45). சினிமா டைரக்டர். இவர், கடந்த 21ம் தேதி மோகன் குமார் குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு, எப்போதும் போல வீட்டின் சாவியை ஜன்னலில் மறைத்து வைத்து சென்றார்.
பின்னர், கடந்த 7ம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 5.75 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடு போயிருந்தது. இதுகுறித்து மோகன் குமார் ஈரோடு தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டு சம்பவம் நடந்த வீடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான மர்மநபரின் படத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், திருட்டில் ஈடுபட்ட நபரான ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் தமிழரசு (23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், தமிழரசு திருடிய நகையை ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்ற போலீசார் திருட்டு நகையை வாங்கிய அந்நிறுவன ஊழியரான சேலம் தேவூர் மயிலம்பட்டியை சேர்ந்த பழனிசாமி(41) என்பவரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
The post சினிமா டைரக்டர் வீட்டில் கைவரிசை திருட்டு நகை வாங்கிய பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது appeared first on Dinakaran.