- சிங்கப்பெருமாள் கோயில்
- செங்கல்பட்டு
- சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட்
- தாம்பரம் –
- செங்கல்பட்டு மாவட்டம்
- சிங்கபெருமாள்…
- தின மலர்
செங்கல்பட்டு, மார்ச் 25: தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட் 2 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி பல்வேறு நகரங்களுக்கும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரயில்வே கேட்டின் இருபுறமும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றதால் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கித் தவித்தனர். சுமார் 3கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் கேட்டை கைகளால் தூக்கிப் பிடித்துக்கொண்டு வாகனத்தை சாய்த்து கடந்து சென்றனர்.
ஒருசிலர் தண்டவாளத்தை ஒட்டிய ஜல்லிக்கற்களின் மீது ஆபத்தான நிலையில் வாகனத்தை ஓட்டிச் சென்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த வழித்தடத்தில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்படுவதால் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிற்பதால் லெவல் கிராசிங்கில் உள்ள கேட்டை திறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சிக்னல் கோளாறு பழுது நீக்கும் பணிகளும் தாமதமாக நடக்கிறது. ரயில்வே ஊழியர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் முறையாக பதில் அளிப்பதில்லை. எனவே, அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு பிரச்னைக்கு ரயில்வே அதிகாரிகள் தீர்வுகாண வேண்டும். இப்பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுக்கின்றனர்.
The post சிக்னல் கோளாறு காரணமாக சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் மூடல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.