தண்டராம்பட்டு, ஜூன் 5: தண்டராம்பட்டு அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த அல்லப்பனூர் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இருந்து தென்முடியனூர் கிராமம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் செல்கிறது. இதனால் சாலையானது சேதமடைந்து குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும். ஜல்லித்துகள்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களில் இருந்து கற்கள் சிதறி சாலையில் விழுவதாலும் புகையாலும் வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்ல முடியவில்லை. எனவ, தூசி பறக்காதபடி சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போலீசார் சமரசம் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.