சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. வேளாண் குடிமக்கள் ரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இந்நிலையில், சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்கும் பணியில் உடனடியாக தமிழக அரசோ, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்கு உரியதாகும். மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் குறுவட்ட வாரியாக கணக்கிடாமல், வருவாய் கிராம வாரியாக இழப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும். அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து பெரும் துயரில் வாடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடு தர வேண்டும்: வைகோ கோரிக்கை
