சேலம்: சேலம் மாவட்டத்தில் உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சேலம் அமானிகொண்டலாம்பட்டி பகுதியில் எஸ்ஐ வேல்முருகன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அமானிகொண்டலாம்பட்டி நடுகரட்டில் சாலையோரமாக நிறுத்தப்பட்ட சரக்கு வேனை சோதனையிட்டனர். அதில், ரேஷன்அரிசி இருந்தது தெரிந்தது. சரக்கு வேனில் இருந்த 1.2டன் ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் நாழிக்கல்பட்டியை சேர்ந்த தங்கராஜ்(34), கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(22) என்பதும், அமானிகொண்டலாம்பட்டி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்க ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2பேரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். இதனால், இலவச தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு ரேஷன் அரிசி கடத்தல் பதுக்கல் குறித்து தொடர்பாக புகார் அளிக்கலாம். பொதுமக்களின் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்’ என்றனர்.
The post சரக்கு வேனில் கடத்தி வந்த 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.