×

சபரிமலையில் இதுவரை 16 லட்சம் பேர் தரிசனம்: இன்று 95 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு..!

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை 16 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று 95 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2 வருடங்களுக்குப் பின்னர் பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறந்த பின்னர் ஒரு நாள் கூட பக்தர்கள் வருகை குறையவில்லை. கடந்த மாதம் தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். ஆனால் டிசம்பர் மாதத்தில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இந்த மாதம் முதல் வாரத்தில் தினசரி வரும் பக்தர்கள் எண்ணிக்கை சராசரியாக 80 ஆயிரமாக இருந்தது. ஆனால் தற்போது 2வது வாரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக சராசரியாக தினமும் 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் நேற்று தான் மிக அதிகமாக 1,07,695 பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று தரிசனம் செய்து திரும்பினர். இன்று 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், 12ம் தேதி 1 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.நேற்று பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் நிலக்கல் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்களும் நிரம்பி வழிந்தன. இதனால் பக்தர்கள் சாலை ஓரத்திலேயே தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் சபரிமலை செல்லும் வழியில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இன்றும் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை சபரிமலையில் 16 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜை நெருங்கி வருவதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்றால் சன்னிதானத்தில் நெரிசலை குறைப்பதற்காக நிலக்கல் மற்றும் பம்பையில் பக்தர்களை தடுத்து நிறுத்தி சிறிய சிறிய குழுக்களாக அனுப்புவதற்கு போலீசார் தீர்மானித்துள்ளனர்.வனப்பகுதி வழியாக செல்ல தடைசபரிமலைக்கு பெரும்பாலான பக்தர்கள் பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் பாதை வழியாகத்தான் செல்வது வழக்கம். தற்போது இந்த பாதையில் கடும் நெரிசல் காணப்படுவதால் சில பக்தர்கள் பம்பையில் இருந்து வனப்பகுதி வழியாக சன்னிதானம் செல்வது தெரியவந்துள்ளது. வனவிலங்குகள் இருக்க வாய்ப்புள்ளதால் பக்தர்கள் வனப்பாதை வழியாக செல்ல வேண்டாம் என்று சன்னிதானம் எஸ்பி ஹரிச்சந்திர நாயக் தெரிவித்துள்ளார்….

The post சபரிமலையில் இதுவரை 16 லட்சம் பேர் தரிசனம்: இன்று 95 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு..! appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,
× RELATED ஓணம், புரட்டாசி மாத பூஜைகளுக்காக...