×

சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று, 110-வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டுமென்பது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கிய விதி. இதில், முன்பெல்லாம் ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளையும், ஆதரவு கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் மட்டுமே அழைத்து நடத்தப்பட்ட கூட்டம்போல் இல்லாமல், அனைத்து இயக்கங்களையும் சார்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை குழு உறுப்பினர்களாக அமைத்து 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய அரசாணையை நாங்கள் வெளியிட்டோம். அவர்களையெல்லாம் அழைத்து ஆகஸ்டு மாதம் 19ம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திலே பல நல்ல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக, அவற்றில் சிலவற்றை செயல்படுத்த வேண்டும். முதலாவதாக, மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்க சட்டம் இயற்றும். அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்த சட்டமன்ற தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.2வதாக, அந்த கூட்டத்தில், ஆதி திராவிட நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பொது நீரோட்டத்திற்கு கொண்டுவர வேண்டுமென்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினி பயிற்சி போன்றவை பள்ளி கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும். ஆனால், நிர்வாகம் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கைவசமே இருக்கும். 3வதாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்குத் தற்சமயம் தமிழ்நாட்டில் 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும் நான்கு புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டத்தை தொடர்ந்து இன்னும் நான்கு புதிய நீதிமன்றங்களை சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என வழக்குகள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், இந்த நான்கு மாவட்டங்களில் அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 4வதாக, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை சமுதாய கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்குவற்கு தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் ‘சமத்துவம் காண்போம்’ என்கிற தலைப்பில் காவல் துறை, வருவாய் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.5வதாக, தமிழ்நாட்டில் பல கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதி பயணத்திலும் பிரிவினைகள் இருக்க கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக வளர்ச்சி பணிகளை செயல்படுத்த அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும். 6வதாக, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு ரூ.85,000ல் இருந்து ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ.12 லட்சமாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும். விழிப்புணர்வு கூட்டமே தேவையில்லை என்கிற நிலையை அடைவதே நம் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் மனதில் மடைமாற்றத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கேற்ப ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற ஒப்பற்ற தத்துவத்தின்படி இணைந்து வாழ அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.மதுரையிலும், திருநெல்வேலியிலும் ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும், வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்….

The post சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Adi Dhravidar Tribal Welfare Commission to Protect Legal Rights ,CM ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu Assembly Assembly Assembly ,Chief President of the CM ,Chief Minister ,Tamil Nadu Adi Dravidar Tribal Welfare Commission to Protect Statutory Rights ,Dinakaran ,
× RELATED கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன்...