- வேளச்சேரி பேருந்து நிலையம்
- விஜயநகர் சந்திப்பு
- சென்னை
- வேளச்சேரி
- விஜயநகர
- பேருந்து நிலையம்
- கிண்டி
- டி.நகர்
- அம்பத்தூர்
- Thambaram
- தின மலர்
சென்னை: சென்னையின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள், திரையரங்கம், பிரபல உணவகங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் என, அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இங்குள்ள விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிண்டி, தி.நகர், அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த போக்குவரத்து சேவைகளை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரயில் நிலைத்துடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஓரிரு மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்பாட்டிற்கு வரும் போது, தாம்பரத்தில் இருந்து நேரடியாக, மின்சார ரயிலில் வேளச்சேரிக்கு பயணிக்க முடியும். தற்போதுள்ள விஜயநகர் பேருந்து நிலையம், இடநெருக்கடியில் செயல்படுவதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகளுக்கும் கழிவறை, இருக்கைகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தை ஒட்டி, பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த 2010ம் ஆண்டு, 6 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்த இடத்தில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெறாததால், இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதுடன், ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் அருகருகில் அமைந்து, பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே, வேளச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பகுதியில் பணிமனையுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த இடத்தை ஒட்டி சதுப்பு நிலம் உள்ளதால், பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்கிறோம். இடம் கைமாற்றி கொடுத்து, ரயில்வே இடத்தில் பேருந்து நிலையம் அமைத்தால், அனைத்து வகையிலும் வசதியாக இருக்கும். உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். விஜயநகர் பேருந்து நிலையம் இடவசதியின்றி சாலையோரம் அமைந்துள்ளதால், பேருந்துகளை சாலையோரம் நிறுத்தப்பட்டு வாகன நெரிசல், விபத்து நடக்கிறது. வேளச்சேரி ரயில் நிலைய வடக்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து, அந்த இடத்திற்கு ஈடாக, தெற்கு திசையில் உள்ள 6 ஏக்கர் இடத்தை ரயில்வேக்கு வழங்கலாம் என, கோரிக்கை வைத்துள்ளோம். இது பரிசீலனையில் உள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.
The post விஜயநகர் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ரயில் நிலையம் அருகே ஒதுக்கிய 6 ஏக்கர் நிலத்தில் வேளச்சேரி பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.