×

கோவையில் பட்டப்பகலில் துணிகரம் பெண்ணிடம் கத்தி முனையில் தங்க செயின் பறிக்க முயற்சி

 

கோவை, செப். 2: கோவையில் பட்டப்பகலில் பெண்ணிடம் கத்தி முனையில் தங்க செயினை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை பூ மார்க்கெட் தேவாங்கபேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி(46). துணிக்கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை ஆர்.எஸ்.புரம் தண்டுமாரியம்மன் கோயில் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை கழட்டி தருமாறு மிரட்டினர். அவர் மறுத்ததால் 2 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அவரின் நகையை பறிக்க முயற்சி செய்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நகை பறிக்க முயன்ற 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்களையும் கத்தி முனையில் மிரட்டி விட்டு சற்று தொலைவில் நிறுத்தியிருந்த பைக்கில் தப்பினர். விஜயலட்சுமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வாகன பதிவெண்ணை வைத்து நகை பறிக்க முயன்றவர்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில் நகை பறிக்க முயன்றது காந்திபுரத்தை சேர்ந்த டெலிவரி நிறுவன ஊழியர் சேகர் (26), ரத்தினபுரி சாஸ்திரி நகரை சேர்ந்த சின்னு (எ) சுவிக்சன் பெர்னாடு(23) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆர்.எஸ்.புரத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோவையில் பட்டப்பகலில் துணிகரம் பெண்ணிடம் கத்தி முனையில் தங்க செயின் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED கோவை மருதமலை கோயிலுக்கு செல்ல வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்