கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே 4500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றினைத் தேடி ஆவணப்படுத்தும் பணியை பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் உதவியுடன் செய்து வருகின்றனர். இந்நிலையில், வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் கண்டறிந்த பாறை ஓவியத் தொகுப்பை ஆராய்ந்து கூறவேண்டும் என வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவை அழைத்ததன் பேரில், தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், வேப்பனஹள்ளி ஒன்றியம் கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில், நக்கநாயனபண்டா பகுதியில் உள்ள பாறையில் ஓவியத் தொகுதியை பார்வையிட்டனர்.
இந்த பாறை ஓவியம் குறித்து ஆராய்ந்த அருகாட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பாறை ஓவியத் தொகுப்பில் வெண்மை, காவி நிற ஓவியங்களோடு பாறை கீறல்களும் காணப்படுகின்றன. பல்வேறு விதமான சின்னங்கள் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் விலங்கின் மீது மனிதன் அமர்ந்து உள்ளவாறும், இரு விலங்குகள் தனியாகவும் உள்ளன. ஒரு பெண் உருவம் விலங்கின் மீது செல்வதும் இதில் காட்டப்பட்டுள்ளது. இந்த உருவங்கள் மிக நுணுக்கமாக வரையப்பட்டவை என்பதை ஆண், பெண் உருவம் வேறுபடுத்தி காட்டுகிறது. மேலும் இரு ஓவியங்கள் மனித உடலும் பறவையின் தலையும் கொண்டுள்ளன. இதுமட்டுமல்லாது கீழ் பகுதியில் ஒரு பறவை எதையோ பிடித்து உண்பது போல் காட்டப்பட்டுள்ளது. பலவித உருவங்களோடு கோலங்களும் வரையப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமாக, ஒற்றைக் கொம்பன் என்ற (Unicorn) 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி பகுதி அகழ்வாய்வின் போது கிடைத்த முத்திரைகளில் காணப்படும் விலங்கு ஓவியத்தை போலவே, இந்த பாறை ஓவியத் தொகுப்பில் உள்ள விலங்கும் காணப்படுகிறது. அதேபோன்ற ஒற்றை கொம்பும், அது காளை என்பதை குறிப்பிடும் குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது வாலின் அருகே திமில் போன்று காணப்படுவதும் சிந்து சமவெளி விலங்கை அப்படியே ஒத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கும் சிந்து சமவெளிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் கருத்து மேலும் வலுப்படுகிறது. எனவே, இது 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் என்பது உறுதியாகிறது. இவ்வாறு காப்பாட்சியர் கூறினார். இந்த ஆய்வின் போது, முருகன் எம்எல்ஏ., ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், மதிவாணன், டேவீஸ், சுதர்சன், பிரகாஷ், விஜயகுமார், சரவணகுமார், ரவி, பாபு, சலீம், சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.