கோத்தகிரியில் கானுயிர் வார விழா கருத்தரங்கு

 

ஊட்டி,அக்.7: கானுயிர் வார விழாவை முன்னிட்டு கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு மற்றும் கோத்தகிரி வனச்சரகம் சார்பாக கானுயிர் வாரவிழாவை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கு கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி அல்போன்ஸ் தலைமை வகித்தார்.கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கானுயிர்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

லாங்வுட் சோலை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜு சிறப்பு கருத்தாளராக கலந்துக் கொண்டு பேசுகையில்: மனிதர்கள் இந்த பூமி தங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைக்கின்றனர். ஆனால், இந்த புவியில் வாழும் அனைத்து உயிரினங்களில் கடைசியாக தோன்றியதுதான் மனித குலம். நமக்கு முன் தோன்றிய கானூயிர்களுக்கு பூமியில் வாழ நம்மைவிட அதிக உரிமைகள் உள்ளது. ஒரு புலி வாழ்ந்தால் அனைத்து உயிரினங்களும் வாழும்.

யானை இனம் அழிந்தால் பதினாறு வகையான தாவரங்கள் அழியும்.தேனீக்கள் அழிந்தால் ஐந்து வருடங்களில் பூமியே அழிந்துவிடும் என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த உலகம் பூச்சிகளின் உலகம். அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இணக்கமாக வாழ்ந்து வருகின்றன.மனிதன் மட்டுமே சுயநலவாதியாக மாறி கானுயிர்களையும் அவை வாழும் காடுகளையும் அழிக்கிறான், என்றார். இந்த நிகழ்வின் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக ஆசிரியை ராணி வரவேற்புரை நிகழ்த்தினார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை எமல்டா ஜோன் ரூபா நன்றி கூறினார்.

The post கோத்தகிரியில் கானுயிர் வார விழா கருத்தரங்கு appeared first on Dinakaran.

Related Stories: