×

கொளுத்தும் கோடை வெயிலால் வாடி வதங்கும் தக்காளி செடிகள்-விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்  வாடி வதங்கும் தக்காளி செடிகளை கண்டு விவசாயிகள் வேதனையடைந்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், கோட்டூர், சமத்தூர், ராமபட்டிணம், கோபாலபுரம், சூலக்கல், கோவில்பாளையம், கோவிந்தாபுரம், தொண்டாமுத்தூர், சிங்கநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு நடக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் விளைச்சல் அதிகரித்தவுடன், அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  இதில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள்  நல்ல விளைச்சலடைந்தது.  இதனால், கடந்த ஜனவரி மாதம் வரையிலும்  தக்காளி அறுவடை பணி தீவிரமாக இருந்ததுடன் மார்க்கெட்டுக்கு கொண்டுவந்த தக்காளியின் அளவு அதிகமானது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், சுற்றுவட்டார கிராமத்தில் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருக துவங்கியது. அதிலும், இம்மாத துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமானதுடன்,  முழு பருவம் அடைவதற்கு முன்பாகவே, தக்காளி வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பழுத்த தக்காளிகளை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது அதிகமானது. மேலும், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க துவங்கியதால் அதன் விலை மிகவும் சரிந்துள்ளது. கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.25வரை விற்பனையானது. ஆனால் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.10க்கே விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post கொளுத்தும் கோடை வெயிலால் வாடி வதங்கும் தக்காளி செடிகள்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Pollachi ,
× RELATED வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு