கொடைரோடு அருகே காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்

 

நிலக்கோட்டை, செப். 4: கொடைரோட்டை அடுத்த மாலையகவுண்டன்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.கொடைரோடு அருகே மாலையகவுண்டன்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, காளியம்மன், பகவதியம்மன், விநாயகர், நாகதேவதைகள் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களின் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் மேளதாளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மஹா யாகசாலையில் வைத்து கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து நேற்று காலை நிலக்கோட்டை பத்திரகாளியம்மன் மற்றும் பகவதியம்மன் கோயிலின் ராஜகோபுரத்தில் ரிஷிகேஷ் சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

பின்னர் கோபுர கலசத்தில் ஊற்றிய புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. பின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட 5000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கரிகாலபாண்டியன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்பி.செல்வராஜ், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுப்பையா, மாலையகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜான் இன்னாசி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாட்ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்,

The post கொடைரோடு அருகே காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரண்டு வழிபட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: