‘‘உஷாராயிட்டாங்களாமே சிறை காக்கிங்க…’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மத்திய சிறையில கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைதிகளுக்கு சிறைக்குள் உதவும் காவலர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், உஷரான காக்கிங்க சிலர் சிறைக்குள் கைதிகளிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாஜிகிட்ட மட்டும் ஏன் விசாரிக்கலைன்னு தொடர்ந்து கேட்டுகிட்டு இருக்காராமே… என்னா விஷயம்…’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களை கொள்ளையடிக்க மாஜி டிரைவர் முயன்றதும், கேரளாவை சேர்ந்த கும்பலை அழைச்சுக்கிட்டு உள்ளே புகுந்ததும், அதனை தடுத்த காவலாளியை போட்டுத்தள்ளியதும் ஊரறிஞ்ச கதை. இவ்விவகாரத்துல சம்பந்தப்பட்ட டிரைவரு மர்மமான முறையில் இறந்துபோனது தமிழகத்தை உலுக்கியது. கொலை கும்பலும் கூண்டோடு சிக்கியது. இந்த விவகாரத்தில் மாங்கனி மாஜிக்கு முக்கிய தொடர்பு இருக்குன்னு டிரைவரின் சகோதரர் தொடர்ந்து சொல்லிக் கிட்டிருந்தாரு. ஆனா யாரும் எதிர்பாராத வகையில, அவர் ஆதாரங்களை அழித்ததாக திடீரென கைதாகி ஜெயிலுக்கு போயிட்டாரு. ஆனா, அவர் ஸ்ட்ராங்கா சொன்ன அந்த கம்ப்ளைன்ட் பத்தி மாஜிக்கிட்ட விசாரிக்காம இருப்பது ஏன் என்று கன்டினியூவா குடைச்சல் குடுத்துக்கிட்டே இருக்காராம். அதே நேரத்துல, தம்பியோட மிகவும் நெருக்கமா இருந்த இன்ஸ் ஒருத்தரு தான், தம்பி மனைவியை தூண்டி விட்டுக்கிட்டிருக்காரு. அவரையும் போலீஸ் விசாரிக்கல. ஆனா அவங்களை எல்லாம் நீதிமன்றத்துல நிச்சயம் சந்திப்பேன்னு, தினமும் ஒரு திகிலூட்டும் தகவலை சொல்லிக்கிட்டே இருக்காராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வைத்தியானவரை டம்மியாக்க டெல்டாவில் களமிறங்கியிருக்காமே சேலத்துக்காரர் டீம்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஒற்றை தலைமை விவகாரத்தில் சேலத்துக்காரர், தேனிக்காரர் இடையே கடும் பனிப்போர் நீடித்து வருகிறது. இதில் தேனிக்காரருக்கு ஆதரவாக நெற்களஞ்சிய மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவர் செயல்பட்டு வருகிறார். டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர் பலத்தை காட்டுவதற்காக இலைகட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களை தேனிக்காரர் பக்கம் இழுப்பதற்கான ரகசிய வேலையில் இறங்கியுள்ளாராம். தகவல் தெரிந்து கடுப்பான சேலத்துக்காரர், வைத்தியானவரை டெல்டா மாவட்டத்தில் டம்மியாக்க வேண்டும் என அவரது டீமுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம். இதற்கான ரகசிய வேலையில் சேலத்துக்காரர் டீம் மும்முரமாக செயல்பட்டு வருகிறதாம். டெல்டா மாவட்டத்தில் வைத்தியானவருக்கு எதிராக உள்ளவர்களுக்கு இலை கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கும் முயற்சியில் அந்த டீம் இறங்கியுள்ளதாம். இனி… டெல்டாவில் வைத்தியானவரின் கை ஓங்க கூடாது என்பதில் சேலத்துக்காரர் தெளிவாக உள்ளாராம். இதனால் விரைவில் டெல்டா மாவட்டத்தில் இலை கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என இலைகட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேச்சு ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சென்னையில் இருக்கிற அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிலர் நீதிமன்றத்தின் பெயரை சொல்லி பணம் வாங்குகிறார்களாமே’’ தெரியுமா என கேட்டார் பீட்டர் மாமா ‘‘பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் சிறுமிகள், குழந்தைகள் போன்றோர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் கிடைக்கவும் பெண்களுக்காக தனியாக ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. போக்சோ சட்டம் வந்த பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருகிறது. இந்நிலையில் குழந்தை திருமணம் ஒன்றில் பாதிக்கப்பட்ட சிறுமி சமீபத்தில் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரிக்கும் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் வந்து, சிறுமியிடம் ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு சிறுமி, நாங்கள் பணம் கொண்டு வரவில்லை என கூறியுள்ளார். உடனே, பெண் காவலர் உங்களது உறவினர்களுக்கு யாருக்காவது போன் செய்து அவரை பணம் எடுத்துவர கூறுங்கள் என்று கூறி விடாப்படியாக சிறுமியிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார். அதன்பிறகு நடந்தவற்றை சிறுமி குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவரிடம் கூறியுள்ளார். தற்போது அவர் மூலமாக சிறுமி நீதிமன்றத்தில் பணம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை தெரிந்துகொண்டு பணம் வாங்கிய பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளார். இதுபோன்று ஒரு சில காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைக்கும்போது அவர்கள் நீதிமன்றம் பெயரை சொல்லி பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே உயர் அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து பணம் வசூலில் ஈடுபடும் பெண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..’’ என்றார் விக்கியானந்தா…..
The post கொடநாடு விவகாரத்துல மாங்கனி மாஜிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கு என்கிறார் விக்கியானந்தா appeared first on Dinakaran.