காரைக்கால்,பிப்.7:காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியும், புதுவை மாநிலத்தின் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். அவ்வமயம் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில், புதுவை மாநில கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன் அசல் மற்றும் வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்பேரில் 27.3.2021-ம்தேதி அன்று நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் போது புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி தமது சட்டமன்ற உரையில் புதுவை மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் பல விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவிப்பு செய்தார்.
விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்றும், புதிய கடன் பெற்று கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலும் இருந்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை எதுவும் வெளியிடப்படாத நிலையில் கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு விவசாயக் கடன் வசதியும் விவசாயிகள் பெற முடியாத சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு விவசாயம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யாத காரணத்தால் புதிய பயிர் கடன் வாங்க முடியாமல் விவசாயிகள் அடைந்துள்ள சிரமங்கள் குறித்து பலமுறை கடிதம் மூலம் புதுச்சேரி மாநில ஆளுநர் , முதலமைச்சர் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் நேரில் சந்தித்து கடன் தள்ளுபடிக்கான அரசாணையை வெளியிடுமாறு பலமுறை கோரியுள்ளனர். அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாயக் கடன்கள் அனைத்தும் உடனடியாக தள்ளுபடி செய்துவிட்டு விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன்களை வழங்கி வருகிறது. இதை கண்டித்து 9ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
The post கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய கோரி வரும் 9ல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.