கூடுதல் விலைக்கு விற்பனை? டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

கடலூர், ஜூலை 8: கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 146 டாஸ்மாக் கடைகளிலும் விலை பட்டியல் வைக்க வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கோட்ட கலால் அலுவலர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா, பாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலை படி விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர். மேலும் கடைகளில் மது பாட்டில்கள் வாங்க வந்த மது பிரியர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

The post கூடுதல் விலைக்கு விற்பனை? டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: