குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ புதிய பாதை நிகழ்ச்சி

வைகுண்டம், அக். 18: தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில், கிராம மக்களிடையே சாதி, மத வேறுபாட்டை களைந்து ஒற்றுமையுடன் வாழும் வகையில் மாற்றத்தை தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் போது அனைத்து கிராமங்களில் சாதிய அடையாளங்களை அழிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதேபோல் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வைகுண்டம் டிஎஸ்பி அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் மனம் திருந்தி வாழ நினைக்கும் நபர்களுக்கான நல்வழி காட்டும் புதிய பாதை நிகழ்ச்சி, வைகுண்டத்தில் நடைபெற்றது. டிஎஸ்பி மாயவன் தலைமை வகித்து பேசுகையில், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களின் செயல்களாலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களாலும் பாதிக்கப்படுவது அவர்களது குடும்பங்கள் தான் என்பதை உணர வேண்டும். உணர்ச்சி வேகத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு மன வேதனையில் வாழ்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நல் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதே புதிய பாதை நிகழ்ச்சியின் நோக்கம். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளால் பெரும் குற்றங்கள் நடைபெறுகின்றன. குற்றங்கள் குறைய தவறிழைப்பவர்களின் மனநிலை மாற வேண்டும். சாதி அடையாளங்களை ஒழிக்க வேண்டும்.

பொதுவாக சாதி தலைவர்கள் வேலைக்கு செல்வதில்லை. அவர்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே, சாதிய மோதல்கள் குறைந்துவிடும்.வாழ்க்கை அழகானது. அதை அமைதியாக எதிர்கொண்டு பயணிக்க வேண்டும், என்றார். நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்கள் குரும்பூர் ராம கிருஷ்ணன், செய்துங்கநல்லூர் பத்மநாபபிள்ளை, ஏரல் ஜெசிந்தா, வக்கீல் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வை. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வரவேற்றார். மனநல ஆலோசகர் வெங்கடாசலபதி கருத்துரை ஆற்றினார். ஆழ்வார்திருநகரி எஸ்ஐ செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எஸ்ஐக்கள் ராஜா ராபர்ட், சேவியர் பிராங்க்ளின், ரேணுகாதேவி, குருநாதன், முத்துராமன், கிராம உதயம் பணியாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் திருந்தி வாழ புதிய பாதை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: