வருசநாடு, செப்.11: கடமலைக்குண்டு ஊராட்சியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு கரட்டுப்பட்டி மூலவைகை ஆற்றில் 4 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை இல்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயில் அதிகரித்து காணப்படுவதால் உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. தற்போது உறை கிணறுகளில் மிக குறைந்த அளவிலான நீர் மட்டுமே உள்ளது.
இதனால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று முதல் உறை கிணறுகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் பார்வையிட்டனர். பணிகள் முடிந்தாலும் அடுத்த சில மாதங்கள் வரை மட்டுமே குடிநீர் வழங்க முடியும். எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், சேதமடைந்த குழாய்கள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
The post குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: ஊராட்சி நிர்வாகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.