பழநி: பக்தர்கள் வருகை அதிகரிப்பின் எதிரொலியாக பழநி கோயிலில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக 160 நாட்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அறிவித்த செப்டம்பர் மாத தளர்வில் கோயில்களில் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது பழநி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக நேற்று சுகாதாரத்துறையினர் பழநி மலைக்கோயில் மற்றும் அடிவார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப் உள்ளிட்டோர் தலைமையில் நடந்த ஆய்வில் மலைக்கோயிலுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. வரிசையில் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கும் வகையில் கூட்ட மேலாண்மை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கிருமி நாசினிகளை கொண்டு 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காத நிலையை கண்டு உரிமையாளர்களிடம் எச்சரிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பழநி கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.