காரைக்குடி, பிப் 13 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி மருத்துவ அறிவியல் துறையின் சார்பில் உயிரி மருத்துவ அறிவியல் பயன்பாடுகளில் ஆய்வக நுட்பங்களின் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. உயிரி மருத்துவ அறிவியல் துறைத்தலைவர் லங்கேஸ்வரன் வரவேற்றார். துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘’உயிர் மருத்துவ அறிவியலில் ஆய்வக நுட்பங்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்ள இந்த கருத்தரங்கம் வழிவகுக்கும்.
தவிர இக் கருத்தரங்கம் உயிரி மருத்துவ அறிவியல் துறையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் உலக அளவில் உயிரி மருத்துவ பயன்பாடுகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த ஆராய்ச்சிகளை கொண்டு வர சிறந்த தளமாக திகழும்’’ என்றார். அறிவியல் புல முதன்மை பேராசிரியர் ஜெயகாந்தன், பயோ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பயோசென்சார் துறைத்தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர் சேகர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உயிரி அறிவியல் துறைகளின் முதன்மையர் சங்கர், போர்ட்பிளேர்,
அந்தமான மற்றும் நிக்கோபர் தீவுகளின் மண்டல மருத்துவ சுகாதார ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி முனைவர் முருகானந்தம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உயிரி அறிவியல் மற்றும் உயிரி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சரவணன் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் முதுகலை மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
The post காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் விலங்கியல் துறை பன்னாட்டு கருத்தரங்கு appeared first on Dinakaran.