புதுடெல்லி: கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.10,000ஐ கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கியது. சுற்றுச்சூழல் விதிமீறலில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனங்களிடம் சுற்றுச்சூழல் இழப்பீடு அபராதம் வசூல் செய்யப்பட்டு டெல்லி கட்டுமானம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் வாரியத்தில் வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் வாரியத்தில் சேர்ந்துள்ள ரூ.4,000 கோடி நிதியை தொழிலாளர் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என தொடரப்பட்ட பொது நலன் வழக்கில், வாரியத்தில் உள்ள மொத்த தொழிலாளர்கள் விவரத்தை நீதிமன்றம் கேட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், டெல்லியில் 10 லட்சத்துக்கும் அதிக கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை வாரியத்தில்
இதுவரை சேர்க்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என 2019ம் ஆண்டு கூறினார். அதையடுத்து, வாரியத்தில் தொழிலாளர்களை
உறுப்பினர்களாக இணைக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, இதுவரை 36,000 பேர் மட்டுமே உறுப்பினர்கள் ஆகியுள்ளனர்.
ஆன்லைனில் மட்டுமே உறுப்பினர் சேரக்கை என்பதாலும், ஆன்லைன் முறை என்பது படிப்பறிவில்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு சாத்தியப்படாதது என்றும் குழப்படி நீடிப்பதால், குறைந்த அளவில் மட்டுமே வாரியத்தில் உறுப்பினர்களாக தொழிலாளர்கள் உள்ளனர். இதனிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர்களுக்கு பிழைப்பு அடியோடு நின்று போனது.
அதையடுத்து தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி, வாரியத்தின் உறுப்பினர்களாக உள்ள 407 தொழிலாளர்களுக்கு தலா ரூ.10,000 நிவாரணம் வழங்கப்பட்டது என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். அடுத்து வரும் வாரங்களில் மேலும் 2,000 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.