காட்டுப்பகுதியில் வீசியதாக போட்ட நாடகம் அம்பலம்: திருடன் விழுங்கிய தங்கச்செயினை ஸ்கேன் பார்த்து எடுத்த போலீசார்

சாத்தூர்: சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்கச்செயினை விழுங்கி விட்டு, காட்டுப்பகுதியில் வீசியதாக நாடகமாடிய திருடனின் வயிற்றை ஸ்கேன் செய்து, போலீசார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. ஆசிரியை. இவர், நேற்று முன்தினம் டூவீலரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த 2 பேர், அவர் அணிந்திருந்த தங்கச்செயினை திடீரென பறித்தனர். சுதாரித்த அன்னலட்சுமி டூவீலரில் இருந்தவாறே செயினைப் பிடித்துக் கொண்டு திருடர்களுடன் போராடினார். இதில், செயினின் ஒரு பகுதி திருடர்களின் கையிலும், ஒரு பகுதி அன்னலட்சுமி கையிலும் சிக்கியது. செயினை பறித்த திருடர்கள் டூவீலரில் பறந்தனர்.  சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் காட்டுப்பகுதியில் செயின் பறிப்பு திருடர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், செயின் பறித்தவர்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (23) மற்றும் அழகுராஜ் (26) என தெரிய வந்தது. அப்போது அவர்கள் அன்னலட்சுமியிடமிருந்து பறித்த ஒன்றே முக்கால் பவுன் செயினை காட்டுப்பகுதியில் வீசியதாக தெரிவித்தனர். அங்கு தேடியும் செயினைக் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார், முத்துப்பாண்டியின் வயிற்றை தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் செய்தனர். இதில், முத்துப்பாண்டி வயிற்றில் தங்கச்செயின் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி செயின் வெளியே எடுக்கப்பட்டது. இச்சம்பவம் சாத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post காட்டுப்பகுதியில் வீசியதாக போட்ட நாடகம் அம்பலம்: திருடன் விழுங்கிய தங்கச்செயினை ஸ்கேன் பார்த்து எடுத்த போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: