×

கல்லூரி படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பயன்படுத்தி குரூப் 2 தேர்வு எழுதிய மாணவன் 3 ஆண்டு தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை

சென்னை: கல்லூரி படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பயன்படுத்தி குரூப் 2 தேர்வு எழுதிய மாணவனை 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி பணியில் 30 இடம், சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி-12, வேலைவாய்ப்புதுறை இளநிலை அதிகாரி-16, சிறைத்துறை பயிற்சி அதிகாரி -18, தொழில்துறை உதவி ஆய்வாளர்-26, சார்பதிவாளர் (கிரேடு 2)- 73, நகராட்சி ஆணையர் (கிரேடு 2)- 6, உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை)- 16, உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை)- 16, தணிக்கை ஆய்வாளர் (இந்து சமய அறநிலையத்துறை)- 31, மூத்த ஆய்வாளர் (பால்வளத்துறை)- 48, கைத்தறி துறை இன்ஸ்பெக்டர்- 23, மூத்த ஆய்வாளர் (கூட்டுறவுத்துறை)- 599 உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,199 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை  கடந்த 2018ம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து, 11.12.2018 அன்று மேலும் கூடுதலாக 139 காலி பணியிடங்கள் உட்பட 1338 இடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இத்தேர்வுக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 960 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு  நவம்பர் 11ம் தேதி நடந்தது. தொடர்ந்து ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 15 ஆயிரம் பேர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். மெயின் தேர்வு நடத்தப்பட்டு 2019 அக்டோபர் 23ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 2667 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.  ஆனால், அதில் ஒரு மாணவன் கல்வி தகுதியில் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில் அந்த மாணவன் போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மாணவன் 3 ஆண்டுகளுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் க.பாலசந்திரன் கூறியதாவது: குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு 10.8.2018 அன்று வெளியிடப்பட்டது. தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட அன்றைய தேதி வரை டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மருதுபாண்டியன் என்ற மாணவன் தான் பி.ஏ. தேர்ச்சி பெற்றதற்கான புரோவிசனல் சர்டிபிகெட் 24.8.18 என்று தேதியிட்டு வழங்கினார். 15 நாட்களுக்கு பின்னர் படித்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்கிறாரே என்று சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த ஒரு மாணவனின் பணிநியமன ஆணை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, அந்த மாணவன் அளித்த  சான்றிதழ் உண்மையானது தானா என்று பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்கள் நாங்கள் அந்த தேதியில் சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக அந்த மாணவனுக்கு விளக்கம் கேட்டு 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் மாணவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து மாணவன் போலி சான்றிதழை பயன்படுத்தியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அந்த மாணவன் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் 3 ஆண்டுகள் பங்கேற்க தடை விதித்து இன்று (நேற்று) உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் பணிநியமன ஆணைக்கு முன்னர் தேர்வு எழுதிய மாணவர்களின் சான்றிதழை சரிபார்க்க வேண்டும். சான்றிதழ் ேபாலியாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவை அடுத்து போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வு எழுதிய மாணவனுக்கு 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post கல்லூரி படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பயன்படுத்தி குரூப் 2 தேர்வு எழுதிய மாணவன் 3 ஆண்டு தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு...