×

திருவொற்றியூர் பகுதியில் கால்வாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் ரூ.80 கோடியில் அமைக்கப்படும் கால்வாய்கள் இணைக்கப்படாததால் குடியிருப்புக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன் பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 14 வார்டுகளில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 540 தெருக்களில் 375 கிமீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இவ்வாறு நடைபெற்று வரும் இந்த கால்வாய் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பு முடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளனர். ஆனால் பல பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி முழுமையாக முடியாமல் இருப்பதால் பெருமழையின்போது கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர், மதுரை நகர், டிகே.எஸ் நகர், கலைஞர் நகர் போன்ற பல பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் முழுமையாக இணைக்கப்படாமல் இடைவெளியுடன் இருப்பதோடு பல இடங்களில் கால்வாய் போடப்படாமல் உள்ளது. ஏற்கனவே உள்ள பழைய கால்வாய்களும் திறந்த வெளியாக இருப்பதால் இந்தப் பகுதிகளில் மழைநீர், கால்வாயில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.

இந்த கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் சாமுவேல் திரவியம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனாலும் இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த பெருமழையின்போது வடசென்னையில் திருவொற்றியூர் 6வது வார்டுக்கு உட்பட்ட மேற்கு பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளைவிட்டு வெளியேறியதோடு உடைமைகளையும் இழந்தனர்.

வருகின்ற மழைக்காலங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக மழைநீர் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பணிகளை முழுமையாக முடிக்காமல் தற்போது கிடப்பில் விட்டுள்ளதால் பெருமழையின்போது இப்பகுதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே காலம் கடத்தாமல் உடனடியாக இணைக்கப்படாமல் உள்ள கால்வாய்களை இணைத்தும், போடப்படாமல் உள்ள கால்வாய்களை போட்டும் முடிக்க வேண்டும் என்றனர்.

The post திருவொற்றியூர் பகுதியில் கால்வாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,Tiruvottiyur ,Thiruvotiyur Mandal ,Tiruvotiyur ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் சாலையோரம் ஏடிஎம்...