கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம் அரசு அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தகுதியுள்ள அனைவரையும் இணைக்க அறிவுறுத்தல்

அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளருமான அருண் ராய் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள், முதல் கட்டமாக நாளை (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது. அரியலூர் வட்டத்தில் 163 ரேஷன் கடைகள், செந்துறை வட்டத்தில் 74 ரேஷன் கடைகள் என மொத்தம் 237 ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெறுகிறது. இதில், ஜெயங்கொண்டம் வட்டத்தில் 162 ரேஷன் கடை பகுதிகள், ஆண்டிமடம் வட்டத்தில் 67 ரேஷன் கடை பகுதிகள் என மொத்தம் 229 ரேஷன் கடை பகுதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பப் பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும். முதல் கட்ட முகாமுக்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் மட்டும் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கும் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளருமான அருண் ராய் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெறும் இடம், நாள், விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், மாவட்டத்தில் தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் ராய் அறிவுறுத்தினார்.

பின்னர், அரியலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, ஓட்டக்கோவில் நூலகம், ராயம்புரம் இ-சேவை மையம், செந்துறை காலனி சமுதாய கூடம் உள்ளிட்ட மையங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு அடிப்படை வசதிகள், பொதுமக்கள், அலுவலர்களுக்கான இருக்கை வசதிகள், கைரேகை பதிவு செய்யும் கருவிகள், மின்னணு சாதனங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட முகாம் அரசு அலுவலர்களுடன் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு தகுதியுள்ள அனைவரையும் இணைக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: