கரூர், ஜூலை 17: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சமூதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். இந்த விருதுக்கு 16 வயது முதல் 35 வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 2023 ஏப்ரல் 1 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது, 2022 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். இதற்கு சான்று இணைக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் சமூதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட, அளவிட கூடியதாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழக்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தாரர்களுக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இணையதளம் மூலம் ஜூலை 20ம்தேதி மாலை 4மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த நிதியாண்டிற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703493 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விருப்பமா? appeared first on Dinakaran.