கரூரில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப தலைவிகளும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

 

கரூர், ஆக. 18: கரூர் மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் உள்ள குடும்ப தலைவிகளும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு, இன்று முதல் வரும் 20ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட முகாம், ஜூலை 24ம்தேதி முதல் ஆகஸ்ட் 4ம்தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது.

இத்திட்டத்துக்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு வழஙகும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக் கூடாது என தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஒய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை தர இயலாத குடும்பத் தலைவிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.எனவே, இந்த வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பத்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூரில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப தலைவிகளும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: