கரட்டடிபாளையத்தில் மயான சுற்றுச்சுவரை இடித்ததை கண்டித்து மறியல்

 

கோபி, அக். 21: கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு சொந்தமான மயான நிலத்தின் சுற்றுச்சுவரை இடித்த தனியார் அரிசி ஆலை நிர்வாகத்தை கண்டித்து மயானம் முன்பு 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கோபி – சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோபி அருகே உள்ள கரட்டடி பாளையத்தில், நல்லகவுண்டன் பாளையம், கரட்டடி பாளையம் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிவாசலுக்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு என மயானம் லக்கம்பாட்டி பேரூராட்சிக்குட்பட்ட கரட்டடி பாளையத்தில் ஒதுக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயானத்தின் அருகில் உள்ள தனியார் அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரிசி ஆலை உரிமையாளர், இஸ்லாமியர்கள் நேற்று தொழுகைக்கு சென்றபோது, மயானத்தின் சுற்றுச்சுவரை திடீரென இடித்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மயானம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கோபி டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், துரைப்பாண்டி மற்றும் போலீசார் தாசில்தார் உத்திரசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை கட்டித்தர அரிசி ஆலை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

The post கரட்டடிபாளையத்தில் மயான சுற்றுச்சுவரை இடித்ததை கண்டித்து மறியல் appeared first on Dinakaran.

Related Stories: