கம்பம் அருகே காந்தி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

கம்பம். அக். 2: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி கோயிலில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். காந்தி ஜெயந்திவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள காந்தி சிலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, அரசியல் கட்சியினர், அதிகாரிகள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிலையில் சுதந்திரபோராட்டங்களில் 80க்கும் மேற்பட்ட தியாகிகள் கலந்து கொண்டு பெருமை சேர்த்த கிராமமான காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள காந்தி கோயிலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தியாகிகளின் வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், ‘‘சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முன்மாதிரி கிராமம் இக்கிராமம் என்பததை நினைவுப்படுத்தும் ஒரு கலங்கரை விளக்காக, இங்கு காந்தி கோயில் காட்சியளித்து வருகிறது. இந்த காந்தி கோவிலையும், கோவிலில் உள்ள காந்தி சிலையையும் கடந்த 29.12.1985ல் அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை இக்கிராம மக்கள் இக்கோயிலில் சுதந்திரதினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் அர்ச்சனை ஆராதனையோடு காந்தியை தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வருகின்றனர்’’ என்றனர்.

The post கம்பம் அருகே காந்தி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: