×

கன்னிவாடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரம்: நவீன வசதிகளுடன் தயாராகிறது

சின்னாளபட்டி: கன்னிவாடியில் ரூ.5.90 கோடி மதிப்பில் நவீன பேருந்து வளாகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு பஸ்கள் செல்லும் நிலை நிலவியது. சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி புதிதாக கன்னிவாடி பேருந்து நிலையம் ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பில் அமைய உள்ளது. இதற்கான கட்டிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 32 வணிக வளாகங்கள், 10 பேருந்து நிறுத்தும் இடங்கள், பொது சுகாதார வளாகம் 2, சிறுவர் பூங்கா 2, ஓட்டல் 1, பயணிகள் காத்திருக்கும் அறை 2 உட்பட நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று உதவி செயற்பொறியாளர் இசக்கி தலைமையில் பொறியாளர்கள் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து கன்னிவாடி பேரூராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி சண்முகம் கூறுகையில், கன்னிவாடி பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான புதிய பேருந்துநிலையம் கூட்டுறவுத்துறை அமைச்சரின் சீரிய ஏற்பட்டால் அமைந்து வருகிறது. புதிய பேருந்து நிலையம் மூலம் மலைக்கிராமங்களுக்கு தொடர் பேருந்து வசதி கிடைப்பதோடு, பொதுமக்கள் சிரமமின்றி பேருந்தில் செல்வதற்கு பாதை வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். புதிய பேருந்து நிலையம் குறித்து, ஆடலூர், பன்றிமலையை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இரவு 7 மணிக்கு மேல் திண்டுக்கல்லில் இருந்து மலைகிராமத்திற்கு பேருந்து வசதி கிடையாது. ஆனால் கன்னிவாடியில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதால் 10 மணிக்கும் மலை கிராமத்திற்கு பேருந்து வசதி கிடைக்கும். மலைவாழ் கிராம பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து நிலையம் வரப்பிரசாதமாக அமையும் என்றனர்….

The post கன்னிவாடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரம்: நவீன வசதிகளுடன் தயாராகிறது appeared first on Dinakaran.

Tags : Kanniwadi ,Chinnalapatti ,Dindigul District ,Dinakaran ,
× RELATED சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை