கந்தர்வகோட்டை,ஆக.13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (தெற்கு) கந்தர்வகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிற்கு தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் உறுதி மொழியை வாசித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) பாரதிதாசன், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு என்ற திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்தால் ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு ள்ளானவர்களை மீட்டு எடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என மாணவ, மாணவிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாலதி, அடைக்கல ஜெயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி மொழி appeared first on Dinakaran.