கணவன்- மனைவி பிரச்னை: மாமனார், மாமியாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய போலீஸ் சஸ்பெண்ட்

 

கள்ளக்குறிச்சி, நவ. 6: கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையில் மாமனார், மாமியாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சுக்கிரன் என்பவர் அவரது மனைவி லட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 31.10.2023 அன்று சுக்கிரனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் லட்சுமி கோபித்து கொண்டு அவரது தாய் ஊரான மேப்புலியூருக்கு சென்று விட்டார். பின்னர் கடந்த 1.11.2023 அன்று சுக்கிரன் அவரது மனைவி லட்சுமியை அழைத்தபோது ஏற்பட்ட தகராறில் மாமானார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமியார் பாசமலர் ஆகியோரை சுக்கிரன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவலர் சுக்கிரன் மீது 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சண்டை வழக்கில் ஈடுப்பட்ட உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவலர் சுக்கிரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் காவலர் சுக்கிரனை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

The post கணவன்- மனைவி பிரச்னை: மாமனார், மாமியாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய போலீஸ் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: